*குறள் 991:* எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. *சாலமன் பாப்பையா உரை:* எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.
*குறள் 992:* அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. *சாலமன் பாப்பையா உரை:* எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.
*குறள் 993:* உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. *சாலமன் பாப்பையா உரை:* உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.
*குறள் 994:* நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புள ராட்டும் உலகு. *கலைஞர் உரை:* நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.
*குறள் 995:* நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. *கலைஞர் உரை:* விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.
*குறள் 996:* பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன். *சாலமன் பாப்பையா உரை:* பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.
*குறள் 997:* அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர். *கலைஞர் உரை:* அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
*குறள் 998:* நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை. *கலைஞர் உரை:* நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.
*குறள் 999:* நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள். *சாலமன் பாப்பையா உரை:* நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.
*குறள் 1000:* பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று. *சாலமன் பாப்பையா உரை:* நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
Thanks For Your Comment...