*குறள் 1021:* கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில். *சாலமன் பாப்பையா உரை:* வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.
*குறள் 1022:* ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின் நீள்வினையான் நீளும் குடி. *சாலமன் பாப்பையா உரை:* முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
*குறள் 1023:* குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். *சாலமன் பாப்பையா உரை:* என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.
*குறள் 1024:* சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு. *சாலமன் பாப்பையா உரை:* தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
*குறள் 1025:* குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. *சாலமன் பாப்பையா உரை:* தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.
*குறள் 1026:* நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். *சாலமன் பாப்பையா உரை:* ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.
*குறள் 1027:* அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. *சாலமன் பாப்பையா உரை:* போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.
*குறள் 1028:* குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும். *சாலமன் பாப்பையா உரை:* தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.
*குறள் 1029:* இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு. *கலைஞர் உரை:* தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.
*குறள் 1030:* இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி. *சாலமன் பாப்பையா உரை:* துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.
Thanks For Your Comment...