ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் காலியிறுதி ஆட்டம் வரை எந்தவொரு செட்டையும் இழக்காமல் வென்று வந்தார் பி.வி.சிந்து. தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் தைவானைச் சேர்ந்த தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான Tai Tzu-Ying சிந்துவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் பேட்மிண்டனில் இந்தியாவின் தங்கப்பதக்க கனவு தகர்ந்தது. இருப்பினும் மனம் தளராத பி.வி.சிந்து, நேற்று நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை He Bingjiao-வை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.
அணல் பறந்த இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனையை சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட்டில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். சிந்துவுக்கு இது இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் சிந்து.
2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டி வரை சென்ற சிந்து, இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீராங்கனையான கரோலினா மரினுவை எதிர்த்து விளையாடி தோல்வி அடைந்தார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்து தற்போது டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு இந்திய தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Thanks For Your Comment...