*குறள் 921:* உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். *மு.வ உரை: கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
*குறள் 922:* உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். *கலைஞர் உரை:* மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.
*குறள் 923:* ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. *கலைஞர் உரை:* கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
*குறள் 924:* நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. *மு.வ உரை:* நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.
*குறள் 925:* கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். *மு.வ உரை:* விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.
*குறள் 926:* துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். *சாலமன் பாப்பையா உரை:* உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.
*குறள் 927:* உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர். *கலைஞர் உரை:* மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.
*குறள் 928:* களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉம் ஆங்கே மிகும். *கலைஞர் உரை:* மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.
*குறள் 929:* களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. *கலைஞர் உரை:* குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
*குறள் 930:* கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. *கலைஞர் உரை:* ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?
Thanks For Your Comment...