*குறள் 731:* தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு. *மு.வ விளக்க உரை:* குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
*குறள் 732:* பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. *கலைஞர் விளக்க உரை:* பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.
*குறள் 733:* பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.
*குறள் 734:* உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.
*குறள் 735:* பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. *மு.வ விளக்க உரை:* பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
*குறள் 736:* கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.
*குறள் 737:* இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.
*குறள் 738:* பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.
*குறள் 739:* நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.
*குறள் 740:* ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.
Thanks For Your Comment...